Monday 18 June 2018

நான் நினைப்பதை தான் நீங்களும் நினைக்கிறீர்களா?

கண்ணம்மா, நீ சேலை கட்டிக்கொண்டு வாழவேண்டிய பதுமை என்று இல்லை.. சேலையிலும் புரட்சிகள் பல இருந்து உள்ளன.. கஸ்தூரி பாய், அன்னை தெரசா போன்றோரும் சாதித்தனர்... 

நம்முடைய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் உடைகளா உடுத்திக்கொள்ள வசதியாக உள்ளது? 

கண் பறிக்கும் உடைகளை விட ஒரு நாள் சேலை அணிந்து சென்றாலும் தேவதையை போல் உன்னை நீயே உணர்வாய்...  

ஒரு சிகைக்காய் விளம்பரத்தில் கூட பெண் மட்டுமே.. ஏன் ஆண்கள் சிகைக்காய் பயன் படுத்துவது இல்லையா? பெண்களை போதை பொருளாக இன்னும் இந்த சமூகம் பார்க்கிறது.. அந்த சிலந்தி வலையில் சிக்கிக்கொள்ளதே.. 

உலக அழகியாக இந்தியா பெண்கள் தேர்ந்தெடுக்க பட்ட காரணம் இங்கு பலருக்கு தெரிந்திருக்க கூடும்.. "விளம்பரம்" இது மட்டுமே.. இந்தியா அழகு பெண்களை குறி வைத்து நடத்த பட்ட ஒரு விளையாட்டு.. இங்கே தான் ஜனத்தொகை  அதிகம் உள்ளது.. பெண்கள் அதிகம் உள்ளனர்.. இங்கே தான் தங்கள் "Face cream" விற்க முடியும் என்று தெரிந்து உலகமே அரங்கேற்றிய ஒரு நாடகம்.. 


ஒரு பயத்தம் பருப்பு போட்டு வராத அழகையா நாம் இந்த அமிலங்கள் போட்டு பெற்றோம்? உண்மையில் கண்ணாடி அருகில் நின்று நம் முகத்தையும் நம் தாய் முகத்தையும் வைத்து பார்த்தால் தெரிந்து விடும்..  

பெண்மை என்னும் இருளில் இருந்து விலகி உண்மை என்னும் ஒளியை தேடு..  இந்த சமூகத்தின் மாய வலையில் சிக்கிக்கொள்ளாதே, கண்ணம்மா!

Thursday 28 July 2016

நான் கருத்து சொல்ல போறேன்டா..!

நான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம்.. பேருந்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததை  விட வேறு   என்ன வேண்டும்?

பேருந்து கிளம்ப இருக்கும் நேரத்தில் ஒரு 6-7 முதியவர்கள் பேருந்து அருகில் வந்து "மடிப்பாக்கம் போகுமா?" என்று கேட்டனர். "போகும்" என்று நடத்துனர் சொன்னதும் பேருந்தில் ஏறிக் கொண்டனர். அனைவரையும் பார்த்த தருணத்தில் தெரிந்து விடும்.. நகர வாழ்க்கை காற்று தீண்டாதவர்கள்.. கிராமத்தில் நிழலாடிய முகங்கள்... 

மடிப்பாக்கம் செல்ல பயணச்சீட்டு பெற்றுகொண்ட அவர்கள் "மடிப்பாக்கம் வரும்போது கொஞ்சம் சொல்லுங்க" என்று நடத்துனரிடம் கூறினர்.

ஏதோ ஒரு உந்துதலின் பேரில் என் அருகில் இருந்த அம்மாவிடம் பேச்சு குடுத்தேன். "யாரை பார்க்க வந்திருக்கீங்க அம்மா?" என்று நான் கேட்டதும் மகிழ்ச்சியுடன் "என் மவன பார்க்க தான் மா.. இங்க தான் இருக்காங்க" என்று கூறிய பிறகு தொடர்ந்தாள்.. "என் புள்ளைய ரொம்ப நாள் கழிச்சு பார்க்க வரேன் மா.." என்றாள். 

"உங்க பையன் உங்கள பார்க்க ஊருக்கு வர்றது இல்லையா?" என்று நான் கேட்டதும் "இல்ல மா.. அவர்களுக்கு நெறய வேல இருக்கும்.. எனக்கு தான் மனசு கொள்ளாம கெளம்பி வந்துட்டேன்" என்று வெள்ளந்தியான பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தேன்..

'அவர்கள்' என்று அந்த அம்மா கூறியதில் இருந்து அவர்களுக்கு ஒரு மகன்க்கு மேல் இருப்பதை உணர முடிந்தது.. "மடிப்பாக்கத்தில் எங்க மா?"என்று கேட்டதும் "தெரில மா.." என்றவுடன் எனக்கு கொஞ்சம் தூக்கி வாரி போட்டது.. 8 மணிக்கு மேல் ஆகி விட்டது.. தள்ளாடும் வயது கொண்ட முதியவர்கள் அனைவரும்... மடிப்பாக்கத்தில் இறங்கி என்ன செய்ய போகிறார்கள் என்று யோசிக்கவே சங்கடமாக இருந்தது.. 

"உங்க மகன் வந்து கூட்டிட்டு போவாங்களா?" என்றதும் "இல்ல மா, மடிப்பாக்கம் போய்  இறங்கி எங்க வர்றதுன்னு சொல்றேன்னு வச்சிட்டான்.. வேல நெறய இருக்கும் போல..." என்று கூறினாள்.. வர்ற வழியில் தன் மகனுக்கு கைபேசியில் இருந்து அழைத்தாள்.. மகன் எடுக்கவே இல்லை..

இருந்தும் மகன் எப்படியும் தன்னை வந்து அழைத்து செல்வான் என்று நம்பிக்கை மட்டும் கண்ணில் இருந்தது.. மேலும் அந்த அம்மாவிடம் பேசியதில் அவர்களுக்கு 3 மகன்கள் இருப்பது தெரிந்தது.. அனைவரும் பிழைப்புக்காக சென்னைப்பட்டினம் வந்தவர்கள். 

பேசி கொண்டிருக்கையில் என் நிறுத்தம் வரவே கனத்த மனதுடன் இறங்கினேன்.. நான் இறங்கிய பிறகு பேருந்தினுள் பார்க்க அந்த அம்மா ஒரு புன்னகையுடன் எனக்கு கை அசைத்து சிரித்து "பார்த்து போ மா"  என்றாள்."பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு" என்பதை உணர்ந்தேன். 

ஈன்றெடுத்த தாய் தந்தையை விடவும் "ரேட்டிங்", "டார்கெட்" என்னும் எண்ணுக்கு நாம் அடிமை ஆகி விட்டோமா? அனாதை போல இருந்தாங்க பார்க்க.. சென்னை  வந்த அவர்களை போய் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றத விட உங்களுக்கு என்னங்க வேலை இருக்கு? நம்மோட ஒவ்வொரு வெற்றியை பார்த்தும் நமக்கு மேல சந்தோஷப்பட்டது அவங்கதாங்க.. நம்மோட ஒவ்வொரு தோல்வியை பார்த்தும் நமக்கு மேல கஷ்டப்படறதும் அவங்கதாங்க.. அதையும் மறச்சு உங்கள உற்சாகம்  ஊட்டுவதும்  அவங்கதாங்க... அத எல்லாம் உயரத்துக்கு போனதும் எப்படி மறக்க முடியுது? 

உங்களுக்கு குடும்பம் இருக்கு.. இல்லன்னு சொல்லல.. ஆனா அந்த வயசுல அவங்களுக்கு உலகமே நீங்கதாங்க.. இனிமேல் அம்மா அப்பாக்கு அப்புறம் எல்லாம் வச்சுக்கோங்க.. 

"நம் வேலையை குறைக்க பயன்படுத்திய இயந்திரங்களுடன் நாமும் இயந்திரம் ஆகி போன ஒரு நிலைமை...!"



Wednesday 7 October 2015

அலுவலகம்

இஷ்டப்பட்டு வருபவர்களை விட,
குடும்பம் கஷ்டப்படக்கூடாது என்று
 வருபவர்களை கொண்ட உலகம்!

குழந்தைத் தொழிலாளர்

வேலைக்கு செல்லாத தந்தையிடம் இருந்து
'உழைப்பே உயர்வு' என்று கற்றுக்கொண்டது
இன்று தந்தைக்காக வேலைக்கு செல்லும் குழந்தை! 

Friday 17 July 2015

தேவதையின் பிறந்தநாள்!

தேவதையின் பிறந்தநாளை  கொண்டாட
என் தோட்டத்து மலர்களும் பூத்துக்குலுங்கின..!
அன்பே உன் பிறந்தநாளில் உன்னை வாழ்த்த
மழைத்துளிகளும் மண்ணை நனைத்தன..!
நீ நினைத்தவை எல்லாம் வெற்றி பெற
கோவில் மணிகளும் நீங்காமல் ஒலித்தன..!
நித்தமும் உன் உதட்டில் சிரிப்பு தவழ
பிரார்த்தனைகளும் குவிந்தன..!
பதினாறும் பெற்று நீவிர் பெருவாழ்வு வாழ
பெற்றோரும் மனமுருகி வேண்ட..
அந்த கடவுளும் கனிந்து ஆசி கூறுவான்,
பூவே நீ இந்த மண்ணுலகில் வளமுடன் வாழ..!

Wednesday 15 July 2015

கலிகாலத்து மனிதன்!

கனவினை விற்று வாழக் கற்றுக்கொண்டோம்..
போதனைகள் விட்டொழித்து மதம் கொண்டோம்...
கலாச்சாரத்தை விற்று மேலை மயமானோம்...
உரிமைகளை இழந்து சுதந்திரம் பெற்றோம்..
பணத்திற்காக சுயமும் இழந்துவிட்டோம்..!

Thursday 9 July 2015

நவநாகரீக மனிதன்

சிரிப்பின் சாவியை பிறரிடம் கொடுத்து,
சிரிப்பினை தேடி அலையும்
சாவி கொடுக்கும் பொம்மைகள் - நவநாகரீக மனிதர்கள்!