Thursday 28 July 2016

நான் கருத்து சொல்ல போறேன்டா..!

நான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம்.. பேருந்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததை  விட வேறு   என்ன வேண்டும்?

பேருந்து கிளம்ப இருக்கும் நேரத்தில் ஒரு 6-7 முதியவர்கள் பேருந்து அருகில் வந்து "மடிப்பாக்கம் போகுமா?" என்று கேட்டனர். "போகும்" என்று நடத்துனர் சொன்னதும் பேருந்தில் ஏறிக் கொண்டனர். அனைவரையும் பார்த்த தருணத்தில் தெரிந்து விடும்.. நகர வாழ்க்கை காற்று தீண்டாதவர்கள்.. கிராமத்தில் நிழலாடிய முகங்கள்... 

மடிப்பாக்கம் செல்ல பயணச்சீட்டு பெற்றுகொண்ட அவர்கள் "மடிப்பாக்கம் வரும்போது கொஞ்சம் சொல்லுங்க" என்று நடத்துனரிடம் கூறினர்.

ஏதோ ஒரு உந்துதலின் பேரில் என் அருகில் இருந்த அம்மாவிடம் பேச்சு குடுத்தேன். "யாரை பார்க்க வந்திருக்கீங்க அம்மா?" என்று நான் கேட்டதும் மகிழ்ச்சியுடன் "என் மவன பார்க்க தான் மா.. இங்க தான் இருக்காங்க" என்று கூறிய பிறகு தொடர்ந்தாள்.. "என் புள்ளைய ரொம்ப நாள் கழிச்சு பார்க்க வரேன் மா.." என்றாள். 

"உங்க பையன் உங்கள பார்க்க ஊருக்கு வர்றது இல்லையா?" என்று நான் கேட்டதும் "இல்ல மா.. அவர்களுக்கு நெறய வேல இருக்கும்.. எனக்கு தான் மனசு கொள்ளாம கெளம்பி வந்துட்டேன்" என்று வெள்ளந்தியான பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தேன்..

'அவர்கள்' என்று அந்த அம்மா கூறியதில் இருந்து அவர்களுக்கு ஒரு மகன்க்கு மேல் இருப்பதை உணர முடிந்தது.. "மடிப்பாக்கத்தில் எங்க மா?"என்று கேட்டதும் "தெரில மா.." என்றவுடன் எனக்கு கொஞ்சம் தூக்கி வாரி போட்டது.. 8 மணிக்கு மேல் ஆகி விட்டது.. தள்ளாடும் வயது கொண்ட முதியவர்கள் அனைவரும்... மடிப்பாக்கத்தில் இறங்கி என்ன செய்ய போகிறார்கள் என்று யோசிக்கவே சங்கடமாக இருந்தது.. 

"உங்க மகன் வந்து கூட்டிட்டு போவாங்களா?" என்றதும் "இல்ல மா, மடிப்பாக்கம் போய்  இறங்கி எங்க வர்றதுன்னு சொல்றேன்னு வச்சிட்டான்.. வேல நெறய இருக்கும் போல..." என்று கூறினாள்.. வர்ற வழியில் தன் மகனுக்கு கைபேசியில் இருந்து அழைத்தாள்.. மகன் எடுக்கவே இல்லை..

இருந்தும் மகன் எப்படியும் தன்னை வந்து அழைத்து செல்வான் என்று நம்பிக்கை மட்டும் கண்ணில் இருந்தது.. மேலும் அந்த அம்மாவிடம் பேசியதில் அவர்களுக்கு 3 மகன்கள் இருப்பது தெரிந்தது.. அனைவரும் பிழைப்புக்காக சென்னைப்பட்டினம் வந்தவர்கள். 

பேசி கொண்டிருக்கையில் என் நிறுத்தம் வரவே கனத்த மனதுடன் இறங்கினேன்.. நான் இறங்கிய பிறகு பேருந்தினுள் பார்க்க அந்த அம்மா ஒரு புன்னகையுடன் எனக்கு கை அசைத்து சிரித்து "பார்த்து போ மா"  என்றாள்."பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு" என்பதை உணர்ந்தேன். 

ஈன்றெடுத்த தாய் தந்தையை விடவும் "ரேட்டிங்", "டார்கெட்" என்னும் எண்ணுக்கு நாம் அடிமை ஆகி விட்டோமா? அனாதை போல இருந்தாங்க பார்க்க.. சென்னை  வந்த அவர்களை போய் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றத விட உங்களுக்கு என்னங்க வேலை இருக்கு? நம்மோட ஒவ்வொரு வெற்றியை பார்த்தும் நமக்கு மேல சந்தோஷப்பட்டது அவங்கதாங்க.. நம்மோட ஒவ்வொரு தோல்வியை பார்த்தும் நமக்கு மேல கஷ்டப்படறதும் அவங்கதாங்க.. அதையும் மறச்சு உங்கள உற்சாகம்  ஊட்டுவதும்  அவங்கதாங்க... அத எல்லாம் உயரத்துக்கு போனதும் எப்படி மறக்க முடியுது? 

உங்களுக்கு குடும்பம் இருக்கு.. இல்லன்னு சொல்லல.. ஆனா அந்த வயசுல அவங்களுக்கு உலகமே நீங்கதாங்க.. இனிமேல் அம்மா அப்பாக்கு அப்புறம் எல்லாம் வச்சுக்கோங்க.. 

"நம் வேலையை குறைக்க பயன்படுத்திய இயந்திரங்களுடன் நாமும் இயந்திரம் ஆகி போன ஒரு நிலைமை...!"